புதுச்சேரி மாநில அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி நடத்தும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசானது, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு பெறுவதில் தேசிய மருத்துவ ஆணையத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவில்லை. புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்த மட்டில் 4 நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களும் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ள நிலையில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு, மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மாநில அரசுக்கு வழங்கி வந்த அரசின் இடஒதுக்கீட்டை முழுமையாக மறுத்து, அரசுக்கு ஒரு இடம் கூட வழங்கப்படுவதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது இயங்கி வரும் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் மொத்தம் 650 மருத்துவ இடங்கள் இருப்பதாகவும், தேசிய மருத்துவக் கவுன்சிலின் ஆணைப்படி குறைந்தது 50 சதவீத இடங்களை அரசின் இடஒதுக்கீடாக அரசு பெற வேண்டும்.
புதுச்சேரியில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அரசும், தற்போதுள்ள என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசும், ஆண்டுதோறும் மனம்போன போக்கில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொடுக்கும் குறைந்த இடங்களை மட்டுமே அரசின் இடஒதுக்கீடாக பெற்று, ஆண்டுதோறும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் உரிமையாளர்கள் பயன்பெறும் விதத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாக புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
தமிழகத்தில் எனது தலைமையிலான அம்மா ஆட்சியின்போது, அரசு பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதன்மூலம் ஆண்டுதோறும் பல நூற்றுக்கணக்கான ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயிலும் பொன்னான வாய்ப்பினைப் பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்திலும் இதுபோன்ற சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, மாநில அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத்திலும், சட்டமன்றத்திற்கு வெளியிலும் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டதன் விளைவாக, புதுச்சேரி அரசானது இச்சட்டத்தை அமல்படுத்தியது.
அதன்படி, உள் இடஒதுக்கீடு பெறக்கூடிய மாணவர்கள் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படிக்க வேண்டும் என புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டது. 12 ஆண்டுகள் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டும் இச்சட்டத்தின் பயன்கிடைக்கும் சூழ்நிலை உள்ளதால், இச்சட்டத்தின் மூலம் 10 சதவீத இடஒதுக்கீட்டை அரசுப் பள்ளி மாணவர்களால் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தலின்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை இதுநாள் வரையிலும் பெறாத புதுச்சேரியை ஆளும் கூட்டணி அரசைக் கண்டித்தும் இந்த ஆண்டில் இருந்து 50 சதவீத மருத்துவ இடங்களைப் பெற வலியுறுத்தியும் தமிழகம் போன்று, அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துள்ள மாணவர்கள், மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளியின் இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும், அ.தி.மு.க. புதுச்சேரி மாநிலத்தின் சார்பில், இன்று காலை 10 மணியளவில், பழைய பஸ் நிலையம், பேரறிஞர் அண்ணாசிலை அருகில், புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன், தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
புதுச்சேரி மாநில அரசை கண்டித்து நடைபெற உள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.