1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் அதிமுக - தவெக கூட்டணி..? கடம்பூர் ராஜூ சூசகம்..!

1

அதிமுக - தவெக கூட்டணி உருவாகப் போவதாக அரசியல் களத்தில் பேச்சு அடிபட்டு வரும் நிலையில், கடம்பூர் ராஜுவின் பதில் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. ஏற்கனவே இருந்ததை போலவே திமுக கூட்டணி இருக்கும் நிலையில், உடைந்து போன அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதனிடையே, அண்மையில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் கட்சியுடன் ஒரு பிரம்மாண்டமான கட்சி இணையப் போவதாக கூறியிருந்தார்.

இதையடுத்து, அந்த பிரம்மாண்டமான கட்சி எது என்ற பேச்சு தமிழக அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது. அந்த கட்சி தவெகவாக இருக்கக் கூடும் என பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜுவிடம், எடப்பாடா பழனிசாமி பிரம்மாண்ட கட்சி என்று கூறியது தவெகவையா? என நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த கடம்பூர் ராஜு, "தவெகவாக கூட இருக்கலாம். ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என ஏற்கனவே சொல்லி வருகிறோமே" எனக் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், "520 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதில் 50ஐ கூட நிறைவேற்றாத திமுக, மீண்டும் மக்களே சந்திக்க வருகிறார்கள். எது நடந்தாலும் ஒற்றை வார்த்தையில் 'சாரி' என்று முதல்வர் கூறுவது போல திமுகவினர் ஒவ்வொரு இல்லமாக சென்று 'சாரி' எனக் கூறி மன்னிப்பு கேட்டு வருகின்றனர்.

திமுக கூட்டணியில் இருக்கும் ஏதாவது சிறிய கட்சி, மாற்று குரல் எழுப்பினாலும் கூட, அவர்கள் காலை பிடித்து கெஞ்சி, 'ஆட்சியில் பங்கு கேட்கவில்லை, இத்தனை சீட் வேண்டும் எனக் கேட்கவில்லை' என்று சொல்ல வைக்கும் அளவுக்கு திமுகவின் நிலை சென்றுவிட்டது. மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் திமுகவை, 2026 தேர்தலில் தமிழக மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள். அதிமுகவுக்கு மாபெரும் வெற்றியை தருவார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்" எனக் கூறினார்.

முன்னதாக, "எடப்பாடி பழனிச்சாமிக்கு முதிர்ச்சியான அரசியல் தேவை" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு பதிலளித்த கடம்பூர் ராஜு, "திமுக ஆட்சியின் அவலத்தை சொல்ல வேண்டுமா வேண்டாமா என்று யோசிக்கும் முத்தரசனின் முதிர்ச்சி பற்றி அவரே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் நிறைகள் இருந்தால் சொல்லலாம். ஆனால் குறைகளை சுட்டிக்காட்டுவதற்கு முதிர்ச்சி வேண்டும் என்பதுதான் அவர்களின் வாதம். நியாயத்துக்காக போராடிய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இருந்த காலம் மலையேறிவிட்டது. இன்றைக்கு இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் இயக்கங்கள், ஆட்சியாளர்களுக்கு ஜால்ரா போடக்கூடிய வகையில் இருக்கிறார்கள்" என்றார்.

Trending News

Latest News

You May Like