அதிமுக சார்பில் மதுரையில் 16-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிமுக ஆட்சியில், மதுரை மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்ட குடிநீர்த் திட்டங்களை முடக்குவதைக் கண்டித்தும்; மதுரை மாவட்டம் முழுவதும் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீர்படுத்திடவும்; பாதாள சாக்கடைத் திட்டத்தை தாமதப்படுத்துவதைக் கண்டித்தும், வண்டல் மண் அனுமதி என்ற போர்வையில் கனிம வளம் கடத்தலைக் கண்டித்தும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்து 16.11.2024 (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில், திருப்பரங்குன்றத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி, எம்.எல்.ஏ. தலைமையிலும், கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. வி.வி. ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ. முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திமுக அரசைக் கண்டித்தும்; மக்கள் நலனை முன்வைத்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள், வியாபாரிகள், அனைத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.