அ.தி.மு.க. சார்பில், வரும் 1-ம் தேதி திருவாரூர் இரயில் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; "திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 42 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமே இந்த ஆண்டு பருத்தி சாகுபடி எதிர்பார்த்த அளவு இல்லை. எனவே, தாங்கள் உற்பத்தி செய்த பஞ்சுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்த நேரத்தில், கடந்த ஆண்டு சராசரியாக கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய்க்கு மேல் ஏலம் போன பருத்தி பஞ்சின் விலை, இந்த ஆண்டு மிகக் குறைந்த விலைக்கு, அதாவது அதிகபட்சமாக கிலோ ரூ. 53-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 46-க்கும் மட்டுமே ஏலம் எடுக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பருத்தி பஞ்சு ஒரு கிலோவிற்கு ரூ. 75-க்கு குறையாமல் ஏலம் எடுத்தால் மட்டுமே செலவிற்கு கட்டுப்படியாகும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்க்கின்றனர். மேலும் தி.மு.க. ஸ்டாலின் மாடல் ஆட்சியில், கடந்த ஓரிரு ஆண்டுகளாக வெளியூர் வியாபாரிகளை இந்த ஏலத்தில் பங்குகொள்வதற்கு ஒழுங்குமுறை விற்பனை நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
இதன் காரணமாக, திருவாரூரில் ஜூன் 24-ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தைப் புறக்கணித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், ஜூலை 25-ஆம் தேதி நடைபெற்ற ஏலத்திலும் உரிய விலை கிடைக்காததால், இரண்டாவது நாளாக அன்றும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே, பருத்தி பஞ்சுக்கு உரிய விலை கிடைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி, அ.தி.மு.க. திருவாரூர் மாவட்டத்தின் சார்பில், 1.7.2025 - செவ்வாய் கிழமை காலை 9.30 மணி அளவில், திருவாரூர் இரயில் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.