ஏழை மக்களின் வீட்டுக்கு இன்வெர்ட்டர் வழங்க கோரிக்கை - அ.தி.மு.க மனு..!

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில்,அதிமுக சார்பில் மாநில செயலாளர் அன்பழகன், சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை மக்களின் வீட்டிற்கு ஒரு இன்வெர்ட்டர் அரசு சார்பில் வழங்க வேண்டும் என்றும், இந்த திட்டத்திற்கு முதலமைச்சரின் தாயார் பெயரான பாஞ்சாலி அம்மாள் பெயரை வைக்க வேண்டும் என்றார்.
மீனவ கூட்டுறவு சங்கத்தில் பதிந்துள்ள அத்தனை நபர்களுக்கும் தனித்தனியாக மீன்பிடி தடைக்கால நிதி உதவி வழங்க வேண்டும், உள்ளாட்சி துறைகளில் பணிபுரியும் அத்தனை ஊழியர்களுக்கும் உரிய சம்பளத்தை அரசே வழங்க வேண்டும்,துப்புரவு பணியின் போது உயிர் நீத்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் அனைவருக்கும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக பணி வழங்க வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இருசக்கர வாடகை மோட்டார் சைக்கிளை தடை செய்ய வேண்டும் என கூறினார்.
தற்போதைய சட்டமன்ற கூட்டத்தொடரில் 1964-ம் ஆண்டுக்கு முன்பு தாய் வழி குடியிருப்பு ஆதாரம் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கும் பூர்வகுடி அட்டவணை இன சான்றிதழ் வழங்க உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும்,கடந்த காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு மாதம் ரூ.18,000 சம்பளத்தில் மீண்டும் பணி வழங்கப்படும் என்றார்.