1. Home
  2. தமிழ்நாடு

அதிமுக புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியீடு..! செங்கோட்டையன் பெயர் இல்லை...!

1

2026ல் தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, கழக வளர்ச்சி பணிகளை வேகப்படுத்துவது, ஏற்கனவே வழங்கப்பட்ட உறுப்பினர் உரிமை சீட்டுகள் அனைத்தும் உரியவர்களிடம் வழங்கப்பட்டு விட்டதா என்பதை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மாவட்ட பொறுப்பாளர்கள் மேற்கொள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை என்பது ஹைலைட்டான விஷயமாக பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பலரும் மாவட்ட பொறுப்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர். ஆனால் செங்கோட்டையன் பெயர் மட்டும் இல்லை. இவர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருப்பவர். அவரது குட்புக்கில் இடம்பிடித்தவர்.
 

மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு சீனியர். சமீபத்தில் நடந்த அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கான அழைப்பிதழில் செங்கோட்டையன் பெயர் இருந்தும், அவர் பங்கேற்கவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இல்லாத நிலையில் தவிர்த்து விட்டதாக கூறியிருந்தார். இருப்பினும் இது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நகர்வாக அரசியல் பார்வையாளர்கள் கருதினர்.
 

கட்சியின் சீனியர்கள் சிலருமே செங்கோட்டையன் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்தனர். இதன் நீட்சியாக தான் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர். முன்னதாக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்தார். இந்நிலையில் செங்கோட்டையனுக்கு பதில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான ஏ.கே.செல்வராஜ் மாவட்ட பொறுப்பாளராக நியமித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஏற்கனவே அதிமுகவில் முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவக் கூடும் என்று செய்திகள் அடிபட்டன. அதுமட்டுமின்றி திமுகவின் சீனியர் அமைச்சர்கள் சிலர் தங்கள் கட்சிக்கு வருமாறு தூது விட்டிருப்பதாகவும் பேச்சுகள் வந்த வண்ணம் உள்ளன. செங்கோட்டையனின் அடுத்த நகர்வை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like