வரும் 25-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் தெற்கு மாவட்டம், திருநின்றவூர் நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் 25.7.2025 – வெள்ளிக் கிழமை மாலை 4 மணியளவில், திருநின்றவூர் நகர காந்தி சிலை எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக இலக்கிய அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் எஸ்.எஸ். வைகைச்செல்வன் அவர்கள் தலைமையிலும்; கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ளு. அப்துல் ரஹீம், கழக அமைப்புச் செயலாளர் திருவேற்காடு பா. சீனிவாசன், திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஏ. அலெக்சாண்டர், ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நகர, பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் .