இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டம்..!

2024 மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தாலும் கட்சியினரை தொடர்ந்து உத்வேகப்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. குறிப்பாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் நேரடியாக சென்று எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். அடுத்தடுத்து செய்தியாளர்களை சந்தித்து ஆளும் திமுக அரசு மீது காட்டமான கருத்துகளை முன்வைத்தார். கள்ளக்குறிச்சியில் பிரம்மாண்ட ஆர்பாட்டத்தை நடத்தி கவனம் ஈர்த்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று கூறி அதிமுக வலுவாக குரல் எழுப்பியது. ஆனால் அமளியில் ஈடுபட்டதாக கூறி நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த சூழலில் அடுத்தகட்ட நடவடிக்கையாக இன்று (ஜூன் 27) அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.