அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக 26-ம் தேதி ஆலோசனை!
அதிமுக ஒருங்கிணைப்புக் குழு சார்பில் புகழேந்தி, ஜே.சி.டி பிரபாகர், கே.சி. பழனிசாமி உள்ளிட்டோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் அதிமுக உறுப்பினர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். எந்த இடத்திலும் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பல இடங்களில் பெற வேண்டிய முதலிடம், இரண்டாம் இடத்தை கூட பிடிக்காமல் மூன்று, நான்கு என்ற நிலைக்குச் சென்று டெபாசிட் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் மூலம், அதிமுக கட்சியின்மேல் நம்பிக்கை கொண்டிருந்த கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். தொண்டர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியை மேற்கொள்ளும் வகையில் தான் இந்த குழுவை நாங்கள் தொடங்கி உள்ளோம்.
மேலும் தமிழக அளவில் 234 தொகுதிகளிலும் கட்சியை ஒருங்கிணைக்க பொறுப்பாளர்களை நியமித்து செயல்பட இருக்கிறோம். முதற்கட்டமாக 10 பேரை நியமித்துள்ளோம். நான்காக பிரிந்து உள்ள பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை இணைக்கும் முயற்சியில் இறங்கினோம். அவர்கள் நால்வரும் ஒன்றாக அமர்ந்து பேசினால் இப்பிரச்சினை தீர்ந்து விடும். 45 சதவீத வாக்கு வங்கி கொண்ட அதிமுக வாக்கு வங்கி இன்றைக்கு 20 சதவீதமாக குறைந்து விட்டது.
இதே நிலை நீடித்தால் வரும் சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு கேள்விக் குறியாகி விடும். எனவே, இந்த இயக்கம் ஒன்றிணைய வேண்டும். வரும் 26-ம் தேதி அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்து கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.