25 ஏக்கர் பரப்பளவில் கள்ளச்சாராயம் தயாரித்த அதிமுக பிரமுகர் சுரேஷ் கைது..!

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் மீது ஆத்தூர் நகர மற்றும் புறநகர் காவல் நிலையங்களில் கள்ளச்சாராய விற்பனை வழக்குகள் 48-க்கும் மேல் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து உடல் பாதிப்புக்குள்ளாகி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் முதல் மாவட்ட எஸ்.பி, மதுவிலக்குப் பிடிவு அதிகாரிகள், காவலர்கள் என அனைவர்மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சொல்லி உத்தரவிட்டிருந்தார்.
மேலும் கள்ளச்சாராயம் தயாரிக்கும் கும்பலை கூண்டோடு பிடிக்கும் வேலையை தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
அதன் மூலம் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீஸார், இறந்தவர்களுக்கு யார் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது. விற்பனை செய்த நபர் எங்கிருந்து வாங்கி வந்தார் என்கிற கேள்வியுடன் விசாரணையை தொடங்கினர். அதில் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா மற்றும் சகோதரர் தாமோதரன் ஆகியோர் அந்தப் பகுதியில் விற்பனை செய்தது தெரிந்து கைதுசெய்தனர்.
இந்நிலையில், கல்வராயன் மலையில் 25 ஏக்கர் பரப்பளவில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்து வந்த அதிமுக பிரமுகர் சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.சோதனையின் போது கூடுதல் போதைக்காக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஊமத்தங்காயை அரைத்து அதன் சாற்றை சாராயத்தில் கலந்தது விசாரணையில் தெரியவந்தது