தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு..!

மக்களவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும், தென் மாநிலங்களில் குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெறவும் பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வேட்பாளராக நிறுத்தி பலத்தை நிரூபிக்க பாஜக தலைமை யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவுக்கும் மாநில பாஜகவுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வந்தது. இரு தரப்பினரும் மக்களவை தேர்தலில் கூட்டணி தொடர்வது குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் அளிக்கவில்லை.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் குறித்து வருகின்ற 18-ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுகவுக்கும் பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் பட்சத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும்.
பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தற்போது வரை எனக்கு அழைப்பு வரவில்லை என ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.