அதிமுக முன்னாள் அமைச்சரின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன், கார் ஓட்டுநர் ராஜ் குமார் ஆகியோர் கைது..!!

முன்னாள் அதிமுக நிர்வாகி விஜயநல்லதம்பி பல்வேறு நபர்களுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடமும், அவரது உதவியாளரிடமும் ரூ.1.60 கோடி கொடுத்திருந்ததாகவும், மேலும் கட்சி பணிகளுக்கு ரூ.1.50 கோடி என மொத்தம் ரூ.3.10 கோடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துவிட்டதாக கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகிய 4 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் கடந்த மாதம் 15-ந்தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று காலை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கிடையில் நேற்று காலை விருதுநகரில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
இதனை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன், கார் ஓட்டுநர் ராஜ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.