சென்னையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!
வரும் 9ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள தலைமை கழக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கழக பொது செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமை வகிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்முறை நடைபெறுகிறது. இதனால் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னதாக தேர்தல் தோல்வி குறித்து 40 மக்களவை தொகுதி பொறுப்பாளர்கள் உடன் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் இன்று (ஆகஸ்ட் 7) நிறைவு பெறுகிறது. இதுவரை 38 தொகுதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
இதில் பொறுப்பாளர்கள் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த தேர்தல் தோல்வியில் இருந்து படிப்பினையை பெற்றுக் கொள்ள வேண்டும். அடுத்து வரும் தேர்தல்களில் சரியான முறையில் வியூகம் வகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அதேசமயம் தேர்தலில் யாரெல்லாம் நன்றாக வேலை செய்தனர், வேலை செய்யவில்லை, உட்கட்சி பூசலில் ஈடுபட்டவர்கள் யார், கூட்டணி முறிவு, புதிய கட்சிகள் உடனான இணைப்பு ஆகியவை குறித்து எடப்பாடி பழனிசாமி கேட்டு தெரிந்து கொண்டார். கடைசி நாளான இன்று கரூர் மற்றும் புதுச்சேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2026 சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி சில அறிவுரைகள் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதையொட்டி மாவட்ட வாரியாக செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.