அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி திடீர் சாலைமறியல்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ராமம்தொட்டி கிராமத்தில் பிரதமர் கிராம் சதக் யோஜனா திட்ட பணிகளை தொடங்கி வைக்க தி.மு.கவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி கே.பி.முனுசாமி திடீர் சாலைமறியல்...
இன்று ஒன்றிய அரசு ரூ.5 கோடி மதிப்பிலான தார்சாலை அமைக்க தி.மு.க. நிர்வாகியும், கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவருமான மணிமேகலை நாகராஜ் தலைமையில், கும்பாளம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் பூமி பூஜை தொடங்கியது.
இந்த நிகழ்ச்சி நடைபெறுவதை அறிந்த அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், வேப்பனஅள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து இந்த தார் சாலை பணிக்கு தங்களுக்கும் பங்கு உள்ளது என கூறி தனியாக பூமிபூஜை போடுவதற்காக வந்ததாக தெரிகிறது.
அப்போது அங்கு வந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் நாகேஷ், பாக்கியராஜ் மற்றும் தி.மு.க.வினர் இந்த பகுதியில் எங்கள் கட்சியை சேர்ந்தவர் தலைவராக உள்ளார். எனவே எம்.எல்.ஏ. மீண்டும் பூஜை போடக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து பேரிகை-தீர்த்தம் சாலையில் திடீரென்று கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க.வினர் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அ.தி.மு.க.வினர் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.