1. Home
  2. தமிழ்நாடு

அதிமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்கம்..!

1

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரைச் சேர்ந்த ஹரிதரன் என்பவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.இவர் வழக்கறிஞர் எனவும், அதிமுகவின் கடம்பத்தூர் ஒன்றியக் குழு உறுப்பினர் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஹரிகரன் மற்றும் அருளின் நண்பர் ஆவார். மேலும் குற்றவாளிகள் பயன்படுத்திய 6 செல்போன்களையும் வழக்கறிஞர் அருள், ஹரிதரனிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அதில் 6 செல்போன்களையும் சேதப்படுத்தி திருவள்ளூர் கொசஸ்தலை ஆற்றில் ஹரிதரன் வீசியதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்களின் உதவியுடன் கொசஸ்தலை ஆற்றில் இருந்து 3 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்ற செல்போன்களையும் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க., கவுன்சிலர் ஹரிதரன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இவர் திருவள்ளூரின் கடம்பத்தூர் ஊராட்சிமன்ற அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்து வருகிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கட்சியின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில், கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, ஹரிதரன் (கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 3-வது வார்டு உறுப்பினர்) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like