1. Home
  2. தமிழ்நாடு

அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி வைத்ததில் ஸ்டாலினுக்கு நடுக்கம் வந்துவிட்டது - எடப்பாடி பழனிசாமி..!

1

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கூடலூர் பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து 10 ஆண்டுகள் இணைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஒரு கருத்தை சொன்னார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரி ஒரு கருத்தை சொன்னார், சாற்றைக் குடித்துவிட்டு சக்கையை வழங்குவதாகச் சொன்னார், அதில் ரோல் மாடல் தி.மு.க.. தி.மு.க.வில் தொடர்ந்து நிலையான கூட்டணி இருக்கிறது, அ.தி.மு.க. அடிக்கடி கூட்டணி மாறுவதாகச் சொல்கிறார்கள். அ.தி.மு.க.-வைப் பொறுத்தவை கூட்டணியை நம்பியில்லை மக்களை நம்பியிருக்கிறது. தி.மு.க. கூட்டணியை நம்பியிருக்கிறது.

மேலும் சில கட்சிகள் தி.மு.க. கூட்டணிக்கு வருகிறது என்று உதயநிதி சொல்கிறார். ஆக கூட்டணியைத்தான் நம்புகிறார். அ.தி.மு.க. மக்களோடு கூட்டணி வைத்திருக்கிறது. அடுத்தாண்டு தேர்தலில் அ.தி.மு.க. வெல்லும், அதைப் பார்க்கத்தான் போகிறீர்கள். அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கிறது. அ.தி.மு.க. அலுவலகம் அமித் ஷாவிடம் உள்ளதாம். அப்படியா இருக்குது? முன்பு தி.மு.க.வு-க்குள் குழப்பம் ஏற்பட்டது, இரண்டாகப் பிரிந்தது, உடைந்தது, அம்மா இருக்கும்போது வைகோ வெளியில் போனார், அப்போது வைகோ அறிவாலயத்தை கைப்பற்றும் நிலை உருவானபோது, அதை காப்பாற்றிக் கொடுத்த அரசாங்கம் அ.தி.மு.க. அரசு. அ.தி.மு.க. பா.ஜ.க.வோடு கூட்டணி வைப்பதில் என்ன தவறு? இதுவே 1999 மற்றும் 2001 தேர்தல்களில் தி.மு.க. பா.ஜ.க.-வோடு கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தது. அவர்கள் கூட்டணி வைத்தால் பா.ஜ.க. நல்ல கட்சி, அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் மதவாத கட்சி, தீண்டத்தகாத கட்சியா..? இது எந்த விதத்தில் நியாயம்?

அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி வைத்ததில் ஸ்டாலினுக்கு நடுக்கம் வந்துவிட்டது. எதிர்த்து நிற்க தெம்பு, திராணி இல்லாமல் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார். ஸ்டாலின் அவர்களே அ.தி.மு.க. ஆட்சியில் குற்றம் கண்டுபிடித்து சொல்லுங்கள், பதில் சொல்லத்தயார். எங்கள் ஆட்சி பொற்கால ஆட்சி. திட்டமிட்டு கூட்டணி அமைத்தபிறகு விமர்சித்தால் தோல்விதான் உங்களுக்குப் பரிசாக கிடைக்கும். கூடலூரில் பல கூட்டங்கள் நடந்திருக்கிறது,.

ஆனால் இந்த எழுச்சிப் பயணக் கூட்டத்தில்தான் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோன்ற இந்த மக்கள் எழுச்சியே அ.தி.மு.க. ஆட்சி அமைவதற்கு அச்சாணி. நேற்று முன்தினம் 158-வது தொகுதியில் உங்களை சந்திக்கிறேன். 158 தொகுதியிலும் மக்களைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன், எழுச்சி உரையாற்றினேன், உணர்வுகளைப் பார்த்தேன், அடுத்தாண்டு தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க. களத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்திற்குத்தான் போட்டி தமிழகத்தில் நடக்கிறது. இதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Trending News

Latest News

You May Like