1. Home
  2. தமிழ்நாடு

அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே வெடித்தது வார்த்தைப்போர்..!

1

மைக் கிடைத்தால் போதும், அண்ணாமலைக்கு அப்படி ஒரு வியாதி என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூற, நீங்கள் எப்படி பதவிக்கு வந்தீர்கள் என்று தெரியும் என அண்ணாமலை கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுக்க அதிமுக - பாஜக இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, மைக்கைப் பார்த்தால் அண்ணாமலைக்கு ஒரு வியாதி போல. மைக்கைப் பார்த்துவிட்டாலே பேட்டி கொடுக்கத் தொடங்கிவிடுவார். அப்படி ஒரு வியாதி அவருக்கு. எல்லோரும் உழைத்து பதவிக்கு வந்தவர்கள். ஆனால் உழைக்காமலே பதவிக்கு வந்தவர் ஒருவர்தான். அவர் யாரென்றால்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைதான். அவர் கட்சிக்காக என்ன உழைப்பைக் கொடுத்தார். பாஜகவில் எத்தனை முன்னணி தலைவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு யாருக்குமே இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏதோ ஒரு வழியில் தலைவர் பதவியைப் பெற்றார். அதை வைத்துக்கொண்டு இன்று தலைகால் புரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

இந்த பேச்சுக்கு பதிலடி கொடுப்பதாக எண்ணிய அண்ணாமலை, கடுமையான வார்த்தைகளால் தனது எதிர்க்கருத்தை பதிவு செய்து, அந்த பேச்சு நேற்று கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசுகையில், கூவத்தூரில் நடந்தது அ.தி.மு.க. பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் நிகழ்வா? அங்கு நடந்தது ஒரு அலங்கோலம். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி நடத்திய ஒரு கட்சி, தி.மு.க.வுக்கு மாற்றாக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைத்த கட்சி, கூவத்தூரில் என்ன அநியாயத்தை செய்தீர்கள். டெண்டர் போல தலைவரை தேர்வு செய்தீர்கள்.

மேலும், பச்சை மையில் 10 ஆண்டுகள் கையெழுத்து போட்ட, விவசாயியின் மகனை இந்த அண்ணாமலையை பற்றி பேச பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி அண்ணாமலை விமரிசித்திருந்தார். இதற்கு, மீண்டும் அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும், பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான, தமிழிசை சௌந்தரராஜன் தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு அறிவுரை கூறும் வகையில் பேசியிருக்கிறார்.

இந்நிலையில், அதிமுக மருத்துவ அணியின் மாநில செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் மேற்கண்ட புகார் மனுவை அளித்தார். அந்த புகார் மனுவில், ஆகஸ்ட் 25-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை களங்கப்படுத்தும் நோக்கில் பேசியதாக கூறப்பட்டுள்ளது. 

எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தும் நோக்கிலும், பொது அமைதியை சீர் குலைக்கும் வகையிலும் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே,அதிமுக குறித்தும், எடப்பாடி பழனிசாமி மீதும் அவதூறு பரப்பி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like