1. Home
  2. தமிழ்நாடு

அதிமுக 49-வது ஆண்டு கொண்டாட்டம் : தலைமைக் கழகத்தில் கொடியேற்றிய ஓபிஎஸ் !

அதிமுக 49-வது ஆண்டு கொண்டாட்டம் : தலைமைக் கழகத்தில் கொடியேற்றிய ஓபிஎஸ் !


அதிமுக 49-வது ஆண்டு தொடக்கவிழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பின்னர் அவரின் புகழையும், கொள்கையையும் நிலைநாட்ட 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர், அதிமுக என்னும் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே மெகா வெற்றிகளைப் பெற்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா, தமிழகத்தில் அதிமுக ஆட்சியை தொடர்ந்து நடத்தினார்.

இந்த நிலையில், 48 ஆண்டுகளை நிறைவு செய்து 49-வது ஆண்டில் அதிமுக அடியெடுக்கிறது. அதிமுக தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்றுடன் அதாவது, 17-ம் தேதி சனிக்கிழமை அன்று 49-வது ஆண்டு தொடக்குகிறது.

இதனையொட்டி, இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள, அதிமுக தலைமைக் கழகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் , கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அவரது சொந்த ஊரில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். இதே போல தமிழகம் முழுவதும் தொண்டர்கள் உற்சாக கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக மீது ஏழை எளிய மக்களின் நம்பிக்கை, இரட்டை இலை மீதான அசைக்க முடியாத நம்பிக்கை, அனைத்து ஜாதியினருக்குமான முக்கியத்துவம், மதவாத அரசியல் அல்லாத சூழல் ஆகியவை தான் அதிமுகவை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றதாக அதிமுக தொண்டர்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.

Trending News

Latest News

You May Like