அகமதாபாத் விமான விபத்து; டி.என்.ஏ. மூலம் அடையாளம் காணப்பட்ட 220 பேரின் உடல்கள்..!

கடந்த 12-ந்தேதி லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 டிரீம்லைனர்' விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
மேலும், விபத்திற்குள்ளான விமானம் மெக்நானிநகர் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதியின் மீது விழுந்து வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தின்போது அந்த இடத்தில் இருந்த 29 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பாதியாகவோ, அல்லது முழுவதுமாகவோ எரிந்து காணப்பட்டதால், அவர்களை அடையாளம் கண்டு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து உடல்களை அடையாளம் காண்பதற்காக, விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த டி.என்.ஏ. மாதிரிகள் மூலம் உயிரிழந்த நபர்களின் அடையாளம் கண்டறியப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகளை குஜராத் சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், டி.என்.ஏ. பொருத்தம் மூலம் குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 202 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதில் 202 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குஜராத் சுகாதாரத்துறை மந்திரி ருஷிகேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். அந்த 202 பேரில் 160 பேர் இந்தியர்கள்(இதில் 151 பேர் விமானத்தில் இருந்தவர்கள்), 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள், 34 பேர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் கனடாவை சேர்ந்தவர் என்று அவர் கூறியுள்ளார்.