அகமதாபாத் விமான விபத்து...நொறுங்கிய கனவுகள்… மனதை உருக்கும் சம்பவங்கள்!

ஏர் இந்தியா விமான புறப்பட்ட சில நொடிகளில் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. விமானம் ஏறியவுடன் துளிர்விட்ட 241 பேரின் கனவுகளும் ஒரு சில மணித்துளிகளில் உடைந்து சுக்குநூறானது. விமானத்தில் பயணித்த ஒவ்வொருவருக்கும் ஒரு கதைகள் இருக்கிறது. அவற்றையெல்லாம் கேட்கும்போது நமது மனம் துடிதுடித்து போகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மணிப்பூரில் குகி, மெய்தி இன மக்களிடையே வன்முறை வெடித்துள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த மோதலானது இன்னும் ஓய்ந்தபாடில்லை.
இந்தநிலையில், ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த மணிப்பூரைச் சேர்ந்த பணிப்பெண்கள் லாம்னுந்தீம் சிங்சன் (குகி இனத்தை சேர்ந்தவர்), ஞாந்தோய் சர்மா கோங்பிரைலட்பம் (மெய்தி இனத்தை சேர்ந்தவர்) உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 35 வயதான துணை விமானி குந்தர் உயிரிழந்தார். குந்தர் குறித்து அவரது ஆசிரியர் ஊர்வசி, “குந்தர், மிகவும் புத்திசாலித்தனமான மாணவர், ஒழுக்கமானவர்,நேரத்தை சரியாக கடைபிடிப்பார்.ஒழுக்கமான இயல்பு தான் அவரை ஒரு வெற்றிகரமான விமானியாக மாற்றியது. ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்.அவனுடைய மரண செய்தியை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மிகவும் சிறு வயதில் தன்னுடைய துறையில் சாதிக்க வேண்டும் என்று விரும்பிய மாணவனின் இழப்பு என்னை மிகவும் பாதித்தது” என்கிறார்
தனது மகள் வெளிநாட்டிற்கு படிக்க போகிறார், முதல்முறையாக நம்முடைய குடும்பத்தில் இருந்து ஒருவர் வெளிநாட்டிற்கு செல்கிறார் என்ற அளவில்லா மகிழ்ச்சியில் தனது மகள் பயல் காதிக்கை அகமதாபாத் விமான நிலையத்தில் காலை 10 மணிக்கு விட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் தந்தை சுரேஷ்.ஆட்டோ ஓட்டுநரான சுரேஷ், தனது மகள் இந்நேரம் விமானத்தில் பறந்து கொண்டிருப்பார் என்ற மகிழ்ச்சியில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது அந்த விபத்து செய்தி அவர் காதில் இடியை இறக்கியது. மகள் மரண செய்தியை கேட்டு துடிதுடித்துப்போனார் சுரேஷ்.
விமானம் புறப்படுவதற்கு முன்பாக தனது தந்தைக்கு போன் போட்ட ஏர் இந்தியா விமான ஓட்டுநர் சுமித் சபர்வால் லண்டன் இறங்கியதும் மீண்டும் கால் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நம்பிக்கையுடன் இருந்த அவரது தந்தைக்கு கால் மீண்டும் வரவே இல்லை.விமானம் ஓடுபாதையில் இருந்து கிளம்பியதும் அசாதாரண சூழல் நிலவுவதை உணர்ந்த பைலட் சுமித் “மே டே… மே டே… மே டே” என கூறியிருக்கிறார். இதுதான் அவரது கடைசி வார்த்தை.