வரும் ஜூலை 8, 9 ஆம் தேதி சென்னையில் வேளாண் வணிகத் திருவிழா..!

தமிழ்நாட்டில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் விவசாயிகள் நலத்துறையுடன் இணைந்து விவசாயிகளை மேம்படுத்தும் நோக்கிலும் அவர்களுக்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும் மாபெரும் வேளாண் வணிக திருவிழாவை நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை 8 மற்றும் 9-ம் தேதிகளில் சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் “வேளாண் வணிகத் திருவிழா 2023” நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளைபொருள்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் விற்பனைக்கு காட்சிபடுத்தப்படும். விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் இந்த வேளாண் வணிக திருவிழாவில், வேளாண் சார்ந்த பொருட்கள் காட்சிபடுத்தப்படவுள்ளது. விவசாயிகளை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியாக இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.
பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ள இந்த வேளாண் வணிகத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அங்காடிகள், 300-க்கும் மேற்பட்ட வேளாண் விளைப் பொருள்கள், பாரம்பரிய சிறுதானிய உணவகங்கள், மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறும்.
ஜூலை 8-ம் தேதி கண்காட்சியின் முதல் நாள் ‘உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான துறை சார்ந்த திட்டங்கள்’ குறித்து வேளாண் வல்லுனர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பேசுகின்றனர். அடுத்ததாக ‘உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை நிர்வகித்தல்’ மற்றும் ‘உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான நிதி உதவி திட்டங்கள்’ குறித்தும் வல்லுநர்கள் பிற்பகல் உரையாற்றுகிறார்கள். இரண்டாம் நாள் கண்காட்சியில் ‘அறுவடைக்குப் பின் மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டுதல்’ மற்றும் ‘ஏற்றுமதி சந்தைப்படுத்துதல்’ குறித்து வல்லுநர்கள் உரையாற்றுகின்றனர்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் “வேளாண் வணிகத் திருவிழா 2023 - உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளை பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சி” வரும் ஜூலை 8 & 9ஆம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. 1/2 pic.twitter.com/UxAS68J99m
— MRK.Panneerselvam (@MRKPanneer) July 4, 2023
இந்த திருவிழாவில் கலந்து கொள்ள கட்டணம் கிடையாது, அனுமதி இலவசம். பொதுமக்கள் கலந்து கொண்டு வேளாண் பொருள்களை பார்வையிடலாம். விவசாயிகள், தொழில் முனைவோர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் இந்த நிகழ்சிகளில் பங்கேற்று பயன்பெறலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.