வயது ஒரு தடையல்ல...68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வெழுதிய பிரபல மலையாள நடிகர்..!
திருவனந்தபுரம் குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் இந்திரன் என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் சிறுவயதாக இருந்தபோதே, இவரது குடும்பம் பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டது..
இதனால் அவர் நான்காம் வகுப்பு வரையிலேயே படித்துள்ளார். அதன்பிறகு பீடி தொழிலாளியாகவும், கட்டுமான தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தார்.மேலும் தையல் தொழிலையும் கற்றார். அதன்மூலம் குடும்பத்திற்கு வருமானத்தை கொடுத்து வந்தார்.
பின்னர் நாடகங்களில் நடித்து வந்த அவர், 1981-ம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். ஏராளமான மலையாள படங்களில் அவர் நடித்திருக்கிறார்.1990-களில் பல்வேறு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக இருந்ததால் அவரால் படிப்பை தொடர முடியவில்லை. ஆனால் பள்ளி படிப்பை தொடர வேண்டும் என்பது அவரது நீண்டநாள் ஆசையாக இருந்துள்ளது. அதனை அவர் தற்போது நிறைவேற்றியிருக்கிறார்.
திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் நடந்துவரும் சமத்துவ வகுப்பில் சேர்ந்து, வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடக்கும் வகுப்பில் கலந்துகொண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல நடிகர் இந்திரன், இன்று எழுத்தறிவு இயக்கத்தின் 7ஆம் வகுப்பு தேர்வினை எழுதினார். இவர் திருவனந்தபுரம், அட்டகுளங்கரா பகுதியில் உள்ள மத்திய பள்ளியில் 7ஆம் வகுப்பு தேர்வெழுதினார். இந்த தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியாகும்.