மீண்டும் மீண்டுமா ? பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்கிறது..!

கர்நாடகா முழுவதும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களை தயாரித்து, அதனை விற்பனை செய்து வருகிறது நந்தினி நிறுவனம். இந்நிலையில், இந்நிறுவனத்தில் 2025ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக தற்போது பால் விலையை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நந்தினி பால் விலை ஏற்றத்திற்கு கர்நாடக அரசும் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி மூலம் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்கிறது என கர்நாடக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஎன் ராஜண்ணா இன்று தெரிவித்துள்ளார். பால் மட்டுமின்றி தயிரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ தயிரின் விலை 4 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தப்படும் நந்தினி பால் மற்றும் தயிர் பொருட்கள்
டோன்ட் பால்: புதிய விலை லிட்டருக்கு ரூ.46 (பழைய விலை ரூ.42)
ஹோமோஜெனஸ் செய்யப்பட்ட டோன்ட் பால்: புதிய விலை லிட்டருக்கு ரூ.47 (பழைய விலை ரூ.43)
பசும்பால் (பச்சை பாக்கெட்): புதிய விலை லிட்டருக்கு ரூ.50 (பழைய விலை ரூ.46 இலிருந்து)
சுபம் பால்: லிட்டருக்கு ரூ.52 (பழைய விலை ரூ.48)
தயிர்: லிட்டருக்கு ரூ.54 (பழைய விலை ரூ.50)
கர்நாடகா கால்நடைத்துறை அமைச்சர் கே வெங்கடேஷ் கூறுகையில்,"முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், நந்தினி பால் விலையில் லிட்டருக்கு 4 ரூபாயும், தயிர் விலையில் கிலோவுக்கு 4 ரூபாயும் உயர்த்த ஒப்புதல் வழங்கபட்டுள்ளது. பால் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலுக்கான செலவைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்த்தப்பட்ட நிலையில், அந்த தொகை மாநிலத்தின் பால் உற்பத்தியாளர்களை நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்ய வழிமுறைகள் எடுக்கப்படும். கூடுதலாக, 2024ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட 1 லிட்டர் நந்தினி பாலுக்கு ரூ.2 விலை உயர்வைத் திரும்பப் பெறப்படுகிறது. அதற்கு முந்தைய நிலையை போலவே 500 மில்லி மற்றும் 1 லிட்டர் பாக்கெட்டுகளில் ரூ.4 என்ற தற்போதைய விலை திருத்தத்தை ஏற்றுக்கொண்டு விற்பனைக்கு நடவடிக்கை எடுக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.