எம்ஜிஆருக்கு பிறகு நிறைய பேருக்கு உதவி செய்தது கேப்டன் விஜயகாந்த் தான்- சிலிர்த்து பேசிய நடிகர்..!
எம்ஜிஆருக்கு பிறகு நிறைய பேருக்கு உதவி செய்தது கேப்டன் விஜயகாந்த்தான்… மனிதனாகப் பிறந்து தெய்வமாகிவிட்டார். அவர் நிச்சயம் தெய்வம்தான் என்று பிரபல நடிகரும், தேமுதிக பிரமுகருமான மீசை ராஜேந்தர் கண்ணீர் மல்கக் கூறியிருக்கிறார்.
அதில், விஜயகாந்த் பற்றிப் பேசும்போதே கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்… மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அந்தப் பேட்டியில் கூறும்போது, “எங்களைப் போன்றோருக்கு இது மிகப்பெரிய இழப்பு… ஒரு நடிகனாகத் தமிழ்நாடு முழுவதும் என்னைத் தெரிகிறது என்றால், அதற்குக் காரணம் கேப்டன்தான்… என்னுடைய பிள்ளைகள் 2 பேருமே இன்னைக்கு டாக்டராக இருக்கிறார்கள் என்றால் அதற்கும் காரணம் கேப்டன்தான்.
இன்னும் என்னை மாதிரி எத்தனையோ பேருக்கு உதவி செய்திருக்கிறார். இறைவன் நேரடியாக வந்து யாருக்கும் உதவ மாட்டார். தனக்கு பிரதிநிதியாக யாரையாவது அனுப்பி உதவுவதாகச் சொல்வார்கள். எம்ஜிஆருக்கு பிறகு நிறைய பேருக்கு உதவி செய்தது கேப்டன். மனிதனாகப் பிறந்து தெய்வமாகிவிட்டார். அவர் நிச்சயம் தெய்வம்தான்.
ஆன்மீகவாதி:
கேப்டன் சிறந்த 3 நடிகர்… சிறந்த மனிதர்… சிறந்த அரசியல்வாதி… அதைவிட சிறந்த மிகச்சிறந்த ஆன்மீகவாதி… விபூதி பூசாமல் வீட்டை விட்டு அவர் வெளியே வருவதேயில்லை… அவருக்கு இறை நம்பிக்கை இல்லை என்பார்கள். ஆனால் அவருக்கு அதிகமான பக்தி உண்டு…
பொதுவாக, மார்கழி மாதம் மறைவு என்பது எல்லாருக்குமே கிடைக்காது… புரட்சித்தலைவர், அம்மையார், கேப்டன் இவர்கள் எல்லாருமே மார்கழியில் மறைந்தவர்கள்… தேவர்கள் ஏதாவது வரம் வேண்டும் என்றால் இந்த மார்கழியில்தான் யாகம், பூஜை செய்வார்களாம்… மார்கழி மாதம் சிறந்தது என்று கண்ணனும் பகவத்கீதையில கூறியிருக்கிறார்.
பூர்வ புண்ணியம்:
புரட்சித்தலைவர் மறைந்தபோது அவ்வளவு கூட்டம் வந்தது. அதற்குப் பிறகு இப்படியொரு கூட்டம் கேப்டனின் மறைவுக்குதான் வந்தது… பூர்வ புண்ணியமும், இப்போதுள்ள புண்ணியமும் ஒன்றிணைந்தால்தான் இப்படி நடக்கும் என்பார்கள்.
கேப்டனின் மறைவின்போது, கருடன் வானத்தில் பறந்தது… கருடன் விஷ்ணுவின் வாகனம், பெருமாளுக்கு பிடித்தது… இறந்துள்ள ஆத்மாவை நேரடியாகவே சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வதற்காகவே, இப்படி கருடன் வானில் பறக்கிறது என்பார்கள்.
கருடன் பறந்தது:
கேப்டனின் 8வது நாள், 11 வது நாள், 16வது நாள் காரியம், 28 நாள் காரியத்தின்போது அவருடைய உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. அப்போது சூரியன் மறைந்து, 6.45 மணியிருக்கும். பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பொதுவாகப் பட்டாசு சத்தம் இருந்தால் பறவைகள் வராது. ஆனால், அந்த இரவு நேரத்திலும் கருடன் பறந்தது. 30வது, 100 வது நாளில் தேமுதிகவினர் மொட்டையடித்தபோதும் கருடன் பறந்தது.
தருமபுரியில் 600 பேர் ஒன்றாக மொட்டைப் போட்டார்கள்… அப்போதும் கருடன் பறந்தது… கேப்டன் நல்ல ஆத்மாவாகி, தெய்வமாகி உள்ளார். ஆனாலும் எங்களுக்கு அவர் இல்லாதது வெற்றிடம்தான்.
தெய்வம்:
இன்றைக்கு கூட எத்தனையோ பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் திருமண பத்திரிகையைக் கேப்டனின் சமாதியில் வைத்து ஆசீர்வாதம் பெற்று செல்கிறார்கள்… புதிதாக வாகனம் வாங்குபவர்களும் சமாதியில் வைத்து ஆசீ பெற்று செல்கிறார்கள். கோயில்களில் செய்வதெல்லாம், கேப்டனின் சமாதியிலும் செய்யப்படுகிறது. அந்தவகையில், கேப்டன் தெய்வமாகி உள்ளார்” என்றெல்லாம் பேசியிருக்கிறார்.