1. Home
  2. தமிழ்நாடு

நாகையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு விஜய் பரப்புரைக்கு அனுமதி!

1

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, உங்க விஜய் நான் வரேன்" என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 13 ஆம் தேதி திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், வருகின்ற 20 ஆம் தேதி சனிக்கிழமை அன்று நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். குறிப்பாக நாகப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் பரப்புரை செய்ய தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் திமுக கூட்டம் நடத்துவதற்கு ஏற்கனவே நகராட்சியில் புக்கிங் செய்யப்பட்டதால் அந்த இடத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும், அபிராமி அம்மன் சன்னதி வாசல், ஐடிஐ வளாகம் உள்ளிட்ட இடங்களும் இடவசதி, பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி காவல் துறை அனுமதி மறுத்தது. வேறு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து தருமாறும் அக்கட்சி நிர்வாகிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து புத்தூர் ரவுண்டானா பகுதியில் விஜய் பேசுவதற்கு தவெகவினர் அனுமதி கோரி மனு அளித்தனர். அதனை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தூர் ரவுண்டானா பகுதியில் விஜய் உரையாற்றுவதற்கு காவல் துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

காரைக்கால் வழியாக வரும் விஜய்க்கு மாவட்ட எல்லையான வாஞ்சூர் ரவுண்டானாவில் வரவேற்பு அளிக்க அக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். நாகை பரப்புரையை முடிந்துக் கொண்டு சிக்கல், கீழ்வேளூர் பைபாஸ் வழியாக திருவாரூர் மாவட்டம் கீழவீதியில் பரப்புரை செய்ய உள்ளார். இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு செல்லும் அவர் அங்கு பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில், திருச்சியில் ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசலை போல் மற்ற மாவட்டங்களிலும் ஏற்படாமல் தவிர்க்க மூன்று மாவட்டங்களில் ஒரே நாளில் பரப்புரை செய்யும் திட்டத்தை மாற்ற தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பரப்புரை செய்யும் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், இனி ஒரே நாளில் இரண்டு மாவட்டங்களில் பரப்புரை செய்யும் வகையில் பரப்புரை திட்டத்தை மாற்ற தவெக தலைமை முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like