இனி சிபிசிஐடி கையில் ஏடிஜிபி ஜெயராம் வழக்கு..!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரும், தேனியை சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு விஜயஸ்ரீ வீட்டில் எதிர்ப்பு எழுந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்தை ஏற்காத பெண் வீட்டார், விஜயஸ்ரீயை தங்களிடம் ஒப்படைக்குமாறு தனுஷ் குடும்பத்தினரை மிரட்டி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் மிரட்டலுக்கு அவர்கள் அடிபணியாததால், தனுஷின் சகோதரரை பெண் வீட்டார் உத்தரவின் பேரில் சிலர் கடத்திச் சென்றதாக தெரிகிறது. தனுஷ் குடும்பத்தினர் இதுபற்றி போலீஸில் புகார் அளித்ததால், சில மணிநேரங்களிலேயே அந்த சிறுவனை கடத்தல்காரர்கள் விடுவித்தனர்.
இதனிடையே, இந்த கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தபோதுதான், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியே வந்தன. அதாவது, சிறுவனை கடத்த பயன்படுத்தப்பட்டது ஏடிஜிபி ஜெயராமின் கார் என்பது முதல் அதிர்ச்சி என்றால், இந்தக் கடத்தலின் பின்னணியில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி இருப்பது அதைவிட அதிர்ச்சியான செய்தி.
இதையடுத்து, பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய போலீசார் முயற்சித்தபோது, அவருக்கு முன்ஜாமின் கிடைத்தது. அதே சமயத்தில், இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்தது. ஒரு கடத்தல் வழக்கில் ஏடிஜிபி சம்பந்தப்பட்டிருப்பதும், அவர் கைது செய்யப்பட்டதும் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனிடையே, தனது சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது.
அவை அனைத்துக்கும் தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்தது. அப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் மன்மோகன் அடங்கிய அமர்வு, ஏடிஜிபி ஜெயராமை காவலில் எடுத்து விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும், ஜெயராம் தொடர்புடைய வழக்குகளை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுமாறும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தலை வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராமுக்கு எதிரான சிறுவன் கடத்தல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால், இதற்கு இன்று பதிலளித்த தமிழக அரசு, வழக்கு விசாரணை முடியும்வரை இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.