சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஏ.டி.ஜி.பி. சஸ்பெண்ட் வாபஸ் கிடையாது; தமிழக அரசு..!

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கத்துடன், காதலனின் தம்பியான சிறுவனை கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பூவை ஜெகன்மூர்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், சிறுவனை கடத்துவதற்கு தன்னுடைய வாகனத்தை கொடுத்து உதவியதாக ஏ.டி.ஜி.பி., ஜெயராம் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கில் பூஜை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, ஏ.டி.ஜி.பி., ஜெயராமை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டதுடன், அவரை சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸ் சீருடையிலேயே ஏ.டி.ஜி.பி.யை ஜெயராமை கைது செய்த போலீசார் அவரிடம் 10 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.
இதனிடையே, சிறுவன் கடத்தல் வழக்கில் தன்னை சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து ஏ.டி.ஜி.பி., ஜெயராம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஏ.டி.ஜி.பி., கைது செய்யப்படவில்லை; விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 'கைது செய்யப்படவில்லை என்றால், அவரை ஏன் பணியிடை நீக்கம் செய்தீர்கள். நீங்கள் இதை செய்திருக்கக்கூடாது. பணியிடை நீக்கத்தை திரும்பப் பெறுவது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாட்டை கேட்டுச் சொல்ல வேண்டும்' என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில், 'சிறுவன் கடத்தல் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி., ஜெயராம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கு விசாரணை நடந்து வருவதால் பணியிடை நீக்கம் என்பது தொடர வேண்டும்,' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏ.டி.ஜி.பி., பணியிடை நீக்கம் செய்ததற்கான ஆவணங்களையும் தமிழக அரசு தாக்கல் செய்தது.