அடேய், ஆத்தாளுக்கு ஆகாதுடா.. தடுப்பூசி போட மறுத்து சாமியாடிய மூதாட்டி..!
புதுச்சேரியில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 389 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 33 பேருக்கு தொற்று உறுதியானது.
இதனால், தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 998 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 59 பேர், வீடுகளில் 240 பேர் என மொத்தம் 299 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 23 பேர் குணமடைந்தனர்.
புதுவையில் தொற்று பரவல் 1.38 சதவீதமாகவும், குணமடைவது 98.32 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 3 ஆயிரத்து 87 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 3 ஆயிரத்து 665 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 12 லட்சத்து 41 ஆயிரத்து 456 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை செவிலியர், ஆஷா பணியாளர், அங்கன்வாடி ஊழியர் உள்ளிட்டோர் அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குள்ள தட்சிணாமூர்த்தி நகரில் வசித்து வரும் ஒரு வயதான தம்பதியின் வீட்டுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள கேட்டபோது, வேண்டாமென தம்பதியினர் கையெடுத்து கும்பிட்டனர். தொடர்ந்து, வேண்டாம், வேண்டாம் போங்கள் என்று விரட்டினர்.
அப்போது செவிலியர், தடுப்பூசி செலுத்தினால் ஒன்றுமே ஆகாது என்றார். உடனே திடீரென அங்கிருந்த மூதாட்டி சாமி வந்து, “மாரியம்மா, அங்காளம்மா ஆகாதுன்னு சொல்றேன்” எனக் கத்தினார். இதையடுத்து செவிலியர் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.