உண்மையில் நான் சாமியாரே கிடையாது.. அந்தர் பல்டி அடித்தார் அன்னபூரணி..!
உண்மையில் நான் சாமியாரே கிடையாது.. அந்தர் பல்டி அடித்தார் அன்னபூரணி..!

ஆதிபராசக்தி அம்மா அவதாரம் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பெண் சாமியார் அன்னபூரணி சமீபகாலமாக இணைய தளங்களில் வைரலாகி வருகிறார். செங்கல்பட்டில் அருள்வாக்கு சொல்லி வந்த அன்னபூரணியின் அருள்வாக்கு வீடியோக்கள் இணையத்தில் பரவியது.
பலரும் இவரது வீடியோவை ட்ரோல் செய்தனர். ஜனவரி 1-ம் தேதி நடக்க இருந்த அன்னபூரணியின் அவதார அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அன்னபூரணி அரசு அம்மா என்பவரைக் கைது செய்யகோரி இந்து அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்த அன்னபூரணி, புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனக்கும் மொபைல் போன் மூலமாகவும், வாட்ஸ்ஆப் மூலமாகவும் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், இதனால் தனக்கும், தன் பக்தர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
காவல் ஆணையரிடம் புகார் அளித்துவிட்டு பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது, தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது. அதாவது தன்னை போலி சாமியார் என்றும் சாமியார் என்றும் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கின்றனர் ஆனால் உண்மையில் நான் சாமியாரே கிடையாது.
நான் இங்கு வந்துள்ளது ஆன்மீகப் பணி செய்வதற்காக மட்டுமே. தொடர்ந்து அதனை மட்டுமே செய்வேன். இதை உணர்ந்து என்னிடம் வருகிறவர்களுக்கு ஆன்மீக பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறேன். என்னால் பயிற்சி அடைந்த பக்தர்களுக்கு மட்டும் தான் நான் என்னவாக இருக்கிறேன் என்று சொல்ல முடியும். மற்றவர்களால் அதனை உணர்ந்துகொள்ள ,முடியாது.
மேலும், நான் திடீரென சாமியாராக அவதரிக்கவில்லை. கடந்த ஆறு வருடங்களாக மக்களுக்கு ஆன்மீக பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறேன். நான் என்றைக்கும் கடவுளின் அவதாரம் என்றும் கூறியதில்லை. என்னிடம் ஆன்மீக பயிற்சி பெறுபவர்கள் அந்த மாதிரியாக சொல்கிறார்கள். அவதூறு பரப்புவர்களால் என்னை உணர்ந்து கொள்ள முடியாது என தெரிவித்தார்.