மிரட்டலுக்கு பயந்து தான் நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெற்றுள்ளார் - சென்னை உயர் நீதிமன்றம்..!

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ச்சியாக புகார்கள் முன்வைத்து வருகிறார். குறிப்பாக சீமான் மீது வைக்கப்பட்ட பாலியல் புகார் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தார் என குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், 2011ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். 2012ல் அதனை திரும்ப பெற்று கொள்வதாக கடிதம் கொடுத்தார். எனவே இந்த வழக்கை போலீசார் முடித்து வைத்துவிட்டனர். இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நடிகை விஜயலட்சுமி எதற்கான வழக்கை வாபஸ் பெற்றார். இவர் சீமானின் முதல் மனைவியா? எனக் கேட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.
அதில், மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுக் கொண்டது தெளிவாகிறது. பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது. விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறிய புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டை உறுதிபடுத்துகின்றன. சீமான் வற்புறுத்தலால் 6, 7 முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நடிகை விஜயலட்சுமியிடம் இருந்து பெருந்தொகையை சீமான் பெற்றுள்ளார். சீமான் மீது எந்த காதலும் இல்லை. குடும்ப பிரச்சினை, திரைத்துறை பிரச்சினையால் சீமானை விஜயலட்சுமி குடும்பம் அணுகியுள்ளது. அப்போது தான் திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்துள்ளார்.
எனவே இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இது சீமானுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.