மோசடி செயலி : நடிகை தமன்னாவிடம் மணிக்கணக்கில் அமலாக்கத்துறை விசாரணை..!
'எச்.பி.இசட் டோக்கன்' என்ற செல்போன் ஆப் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் மோசடி செய்துள்ளது. HPZ டோக்கன் செயலி மூலம் பல்வேறு முதலீட்டார்களை ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்த வழக்கில் இதுவரை 76 சீன நிறுவனங்கள் உட்பட மொத்தம் 299 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களிடம் பண மோசடி செய்வதற்காகவே இந்த செயலி பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட மோசடி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, அதற்காக பணம் பெற்ற விவகாரத்தில் நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.
'எச்.பி.இசட் டோக்கன்' என்ற ஆப் மக்களிடம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கூறி நம்ப வைத்து மோசடி செய்துள்ளது. பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி என்ற பெயரில் அப்பாவி மக்களிடம் அதிக அளவில் முதலீடுகளை பெற்று மோசடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.
ரூ.57 ஆயிரம் முதலீடு செய்தால் 3 மாதங்களுக்கு தினந்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என கவர்ச்சிகரமாக வாக்குறுதி அளிக்கப்பட்டு மக்களிடம் பணம் திரட்டி ஏமாற்றி உள்ளார்கள். ஆனால் அப்படி பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு ஒருமுறை மட்டுமே பணம் திருப்பி கொடுக்கப்பட்டது. பின்னர் புதிதாக முதலீடு செய்ய அவர்கள் பணிக்கப்பட்டனர். இவ்வாறு ஆயிரக்கணக்கான மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டிருக்கிறது.
சீனர்கள் அதிகமாக உள்ள இந்த செல்போன் செயலி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா பங்கேற்றுள்ளார். இதற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து அவர் பணம் பெற்றுள்ளதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள். இதைத் தொடர்ந்து தமன்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி அசாமின் கவுகாத்தியில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் நேற்று அவர் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் தமன்னாவிடம் விசாரணை நடத்தியதுடன், அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.இந்த விசாரணையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தமன்னா மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.