1. Home
  2. தமிழ்நாடு

வியப்பூட்டும் நடிகை சரோஜா தேவியின் எளிமை..!

1

1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் கன்னடத்து பைங்கிளியான சரோஜா தேவி,ஆரம்பத்தில் நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லாத சரோஜாதேவி, தன்னுடைய அம்மாவுக்காக ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டாராம்..

அதன்படியே மகாகவி காளிதாஸ் படத்திலும் நடித்துள்ளார்.. ஆனால், இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துவிட்டதால், அடுத்து ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிடு என்று அவரது அம்மா சொன்னாராம். அதனால், அம்மாவின் வார்த்தையை ஏற்று, மீண்டும் ஒரு படத்தில் நடித்த சரோஜா தேவி, பெங்களூருக்கே சென்று தன்னுடைய பள்ளி படிப்பை தொடர முடிவு செய்திருக்கிறார். அப்போது, பிரபல டைரக்டர் கே.சுப்பிரமண்யம், அடுத்து ஒரு படம் இயக்க முடிவு செய்து, சரோஜாதேவியை நடிக்க அழைக்கவும், அப்படியே திரைப்பயணத்தை தொடர்ந்துள்ளார் சரோஜாதேவி.

 

கவர்ச்சி, ஆடம்பரம் இவைகளை நம்பாமல், முழுக்க முழுக்க தன்னுடைய நடிப்பை நம்பியவர்களில் சரோஜாதேவியும் ஒருவர்.. ஒரு பேட்டியில் சரோஜாதேவி சொல்கிறார், "ஒரு முறை மிகப் பெரிய காரை வாங்குவதற்கு பம்பாய் சென்றிருந்தேன். அப்போது திரு. வாசன் அவர்களை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் பெரிய கார் வாங்கும் விஷயத்தை சொன்னேன்.அப்போது அவர், "நீ ஒரு பிரபலமான நடிகை. சிறிய காரில், ஆடம்பரமில்லாமல் சென்றாலே உன்னை எல்லோரும் திரும்பி திரும்பிப் பார்ப்பார்கள். கூட்டம் கூடிவிடும்... பெரிய காரில் ஆடம்பரத்துடன் சென்றால், நடிகைதானே என்று பார்க்க விரும்பாதவர்கள் கூட, காரின் கவர்ச்சியில் மயங்கி, உன்னைக் காண வருவார்கள். கூட்டம் அதிகமாவதால் பலருக்குத் துன்பம். பொது வாழ்வில் பிரபலமாகும்போது, ஆடம்பரமில்லாமல் இருப்பதுதான் நல்லது. சினிமா இல்லாவிட்டாலும்கூட எளிமையாக வாழ்ந்தாலே தலை நிமிர்ந்து நடக்கலாம்" என்று சொன்னார்.

வாசன் சார், அப்படி சொன்னதுமே, கார் வாங்கும் எண்ணத்தையே நான் கைவிட்டேன்.. நடிகை எனும்போது, அவளுடைய செய்கைகளையும், அவள் எப்படி நடந்து கொள்கிறாள் என்பதையும் மற்றவர்கள் கூர்ந்து கவனிப்பார்கள்.. ஆகையால், நாம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்" என்கிறார் சரோஜாதேவி. திருமணத்துக்கும் பிறகு நிறைய படங்களில் நடித்து, அதிக பெயரை பெற்றவர் சரோஜாதேவி.. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் திலீப் குமார்தான்.. ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் சரோஜாதேவியின் கணவரை சந்தித்த திலீப்குமார், "சரோஜா நல்ல நடிகை, அவரை நடிக்க வேண்டாம் என்று சொல்லிடாதீங்க" என்று சொன்னாராம். திலீப்குமார் இப்படி சொன்னதுமே ஆச்சரியப்பட்டு போன சரோஜாதேவி கணவர், "உன் திறமையை நீ வீணாக்க வேண்டாம் சரோஜா.. நீ சினிமாவில் தொடர்ந்து நடி" என்றாராம்.

 

கணவரை இழந்து தவித்து கொண்டிருந்த சரோஜாதேவியிடம் சென்ற எம்ஜிஆர், "இந்த மீளா துயரத்தில் இருந்து நீ வெளிவரவேண்டும். இதையே நினைத்துக் கொண்டே இருந்தால் மிகப் பெரிய மனபாதிப்பு ஏற்பட்டுவிடும். பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டாராம். அதேபோல ராஜீவ்காந்தியும் சரோஜாதேவியை டெல்லிக்கு அழைத்து, எம்.பி. பதவியை தருவதாக சொல்லி, மைசூரில் மண்டியா என்ற பகுதியில் போட்டியிட சொன்னாராம். எனினும் ராஜீவ் காந்தி கோரிக்கையையும் நிராகரித்துவிட்டாராம்.

"நேர்மையாக வாழ்வதற்குத்தான் என் அப்பா சொல்லித்தந்திருக்கிறார். அதன்படியே வாழ்ந்துகொண்டும் இருக்கிறேன். அரசியலில் எல்லா நேரங்களிலும் நேர்மையை கடைப்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. காரணம், அரசியலில் ஒரு தரப்பினருக்கு நல்லவராக இருக்கும்போது, மற்றொரு தரப்பினருக்கு கெட்டவராகிவிடலாம். நான் எப்போதுமே ஒரு பொதுவான நபர்.. எனக்கு அரசியல் வேண்டாம். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று நாகரீகமாகவும், மென்மையாகவும் ராஜீவ் காந்தியிடம் சொல்லி மறுத்துவிட்டாராம். இதைக்கேட்ட ராஜீவ் காந்தி, "அப்படியானால், நீங்கள் வேறு எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யக்கூடாது. எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள்" என்று கேட்டாராம். அதன்படியே, சரோஜாதேவியும் ராஜீவ் காந்திக்கு சத்தியம் செய்து தந்துள்ளார்.. இப்போதுவரை அந்த சத்தியத்தை சரோஜாதேவி மீறாமலும் உள்ளார். இந்த தகவலை ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சரோஜாதேவி பகிர்ந்து கொண்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like