நடிகை ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும்... காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேச்சு..!

நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து சமீபத்தில் ஹிந்தியில் வெளியான 'சாவா' படமும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தன்னை ஹைதராபாத்திலிருந்து வந்தவர் என்று குறிப்பிட்டுப் பேசினார். இது கன்னட மக்களையும், கன்னட சினிமா ரசிகர்களையும் கோபமடைய வைத்தது. அது குறித்து எந்தவிதமான வருத்தத்தையும் ராஷ்மிகா வெளியிடவில்லை.
இதனிடையே, கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ., ரவி கனிகா என்பவர் ராஷ்மிகாவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். பத்திரிகையார் சந்திப்பில் அவர் பேசுகையில், “கன்னடப் படமான 'கிரிக் பார்ட்டி' படத்தில் தன்னுயைட சினிமா பயணத்தை ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனா, கடந்த வருடம் பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள அழைத்த போது வர மறுத்துவிட்டார்.
தனக்கு ஐதராபாத்தில் வீடு இருப்பதாகக் கூறியுள்ளளார் ரஷ்மிகா. கர்நாடகா எங்கிருக்கிறது என்று தெரியவில்லை எனப் பேசியிருக்கிறார். திரைப்பட விழாவில் கலந்து கொள்ள அவருக்கு நேரமில்லை. சட்டசபை உறுப்பினர் ஒருவர் ராஷ்மிகாவை 10, 12 முறைக்கு மேல் சந்தித்து அழைப்பு விடுத்தார். ஆனால், அவர் வர மறுத்துவிட்டார். இங்கு வாழ்க்கையை ஆரம்பித்தவர் கன்னடத்தை அவமதித்துள்ளார். அவருக்கு நாம் தக்க பாடம் கற்பிக்க வேண்டாமா?” என கொந்தளிப்புடன் பேசியுள்ளார்.