நடிகை பவித்ரா கவுடா ஜாமீனில் விடுவிப்பு!
நடிகை பவித்ரா கவுடாவிற்கு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் செல்போனில் ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான பிரச்சினையில் ரேணுகாசாமி பெங்களூருவுக்கு கடத்தி வரப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனா். இந்த சம்பவம் ஒட்டுமொத்த கன்னட திரை உலகையும் அதிர்ச்சியில் தள்ளியது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் பெங்களூரு மற்றும் துமகூரு சிறைகளில் அடைக்கப்பட்டனா்.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் தர்ஷன், சிறைக்குள் சொகுசு வசதிகள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நடிகர் தர்ஷன் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அடைக்கப்பட்ட நடிகர் தர்ஷன் தீராத முதுகு வலியால் அவதி அடைந்து வந்தார்.எனவே அவர் தனக்கு ஜாமீன் வழங்கும்படி பலமுறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். முதலில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதற்கிடையே ரேணுகாசாமி கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நடிகை பவித்ரா கவுடாவும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார்.
இந்த நிலையில் நடிகை பவித்ரா கவுடாவுக்கு கடந்த 3 நாட்கள் முன்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. வார விடுமுறை நாட்கள் என்பதால் ஜாமீன் அனுமதி ஆவணங்கள் சிறைத்துறைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து பவித்ரா கவுடா இன்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் வெளியே வந்தார்.