நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு...!
கடந்த 3ம் தேதி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, அர்ஜுன் சம்பத் தலைமையிலான, 'ஹிந்து மக்கள் கட்சி' சார்பில், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், நடிகை கஸ்துாரி, 50, பேசுகையில், தெலுங்கு மொழி பேசுவோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால், செய்தியாளர்களை சந்தித்து, 'திராவிடம் என மக்களை ஏமாற்றுவோர் குறித்து தான் பேசினேன். 'தெலுங்கர் குறித்தோ, தெலுங்கு மொழி குறித்தோ, நான் தவறாக பேசவில்லை. என் பேச்சை திரித்து, அதற்கு வேறு காரணம் கற்பித்து, சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது' என்றார்.
அதன்பின் அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தெலுங்கு மக்களை புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. என் பேச்சை திரும்பப் பெறுகிறேன்' என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே, 'தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதுாறாக பேசிய கஸ்துாரி மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் தெலுங்கு அமைப்புகள் புகார் அளித்தன. கஸ்தூரி மீது சென்னை எழும்பூர், மதுரை திருநகர் போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
போலீசார் தேடி வரும் நிலையில், இன்று (நவ.,11) ஜாமின் கோரி, நடிகை கஸ்தூரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நாளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளைக்கு விசாரணைக்கு வருகிறது. '