என் வெற்றிக்குப் பின்னால் ஒரு ஆண் தான் உள்ளார் - நடிகை தன்ஷிகா..!
கோல்டன் ஸ்டுடியோஸ் சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குனர் ராதிகா இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் ‘தி ப்ரூஃப்’. பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் நடித்துள்ளனர். இசை தீபக். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குனர் மிஷ்கின், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், யூகி சேது பாடலாசிரியர் சினேகன், ரோபோ சங்கர், நடிகர் சந்தோஷ் பிரதாப் உள்பட பல திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
தன்ஷிகா பேசும்போது, ‘ராதிகா மாஸ்டரின் ஃபிரண்ட்ஷிப்பிற்காக மட்டுமே செய்த படம் இது. ராதிகா மாஸ்டர் எங்கு பார்த்தாலும் என்னைப்பற்றிப் பேசுவார். ஊக்கம் தந்து கொண்டே இருப்பார். அவர் மனதிற்கு இந்தப்படம் பெரிய வெற்றி பெறும். பெண்கள் முன்னேறத் தடையாக இருப்பது ஆண்கள் என சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால், எனக்கு என் பயணத்திற்கு ஆண்கள் தான் நிறைய உதவியுள்ளார்கள். என் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் உள்ளார். இனிமே சினிமா வாய்ப்பு வருமா என நினைத்த காலத்தில் வந்த வாய்ப்பு தான் இந்தப்படம். இதில் நல்ல மெசேஜும் உள்ளது’ என்றார்.