நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்..!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் ஏற்பட்ட தகராறில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரசாந்திடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரிடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியதாக தகவல் வெளியானது. இந்த தகவலின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து இந்த வழக்கில் அவரது நண்பர்கள் எனக்கூறப்படும் பிரதீப், கெவின் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இதையடுத்து இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு உள்ளது எனக்கூறி அவரை காவல்துறை தேடி வந்தனர். இதையடுத்து கிருஷ்ணா சரணடைந்தார்.
கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்ரீகாந்திடமிருந்து போதைப்பொருள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என வாதிட்டார். மேலும் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவ பரிசோதனையில் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தியதாக நிரூபிக்கப்படவில்லை என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஜாமீன் மனுக்கள் மீது தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி நிர்மல்குமார் அறிவித்தார். இந்நிலையில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.