1. Home
  2. தமிழ்நாடு

லைக்கா தயாரிப்பில் நடிகர் விஜயின் மகன் இயக்குநராகிறார்!

1

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விஜய் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான லைக்கா தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கூறும் போது, ”தனித்துவமான கதையுடன் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கக்கூடிய அனுபவத்துடன் இந்தக் கதை உள்ளது. ஜேசன் லண்டனில் திரைக்கதை எழுதுவதில் பிஏ (ஹானர்ஸ்) முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து டொராண்டோ ஃபிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பில் டிப்ளோமா பெற்றார். அவர் ஸ்கிரிப்டை விவரித்த போது பார்வையாளர்களாக எங்களுக்கு இது சரியான சினிமா அனுபவத்தைக் கொடுத்ததில் திருப்தி அடைந்தோம்.

அவர் திரைக்கதை எழுதுவதிலும் இயக்குவதிலும் மட்டுமல்லாது படத்தின் முழுமையான தயாரிப்பைப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஜேசன் சஞ்சய் விஜய்யுடன் இணைந்து பணியாற்றும் அற்புதமான அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த படத்தில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் இருப்பார்கள். மேலும், சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இந்தப் படத்தில் பணிபுரிய நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்றார்.

இயக்குநர் ஜேசன் சஞ்சய் விஜய் கூறுகையில், "லைக்கா புரொடக்ஷன்ஸ் போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு எனது முதல் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. என்னைப் போன்ற இளம் திறமையாளர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. எனது ஸ்கிரிப்டை விரும்பி, அதை உருவாக்க எனக்கு முழு ஆக்கப்பூர்வமான சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். நாங்கள் தற்போது தொழில்துறையின் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் மற்றும் சில தொழில் நுட்ப வல்லுனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த வாய்ப்புக்காக நான் சுபாஸ்கரன் சாருக்கு நன்றி கூறுகிறேன். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் மிகப்பெரிய பொறுப்பையும் தருகிறது. இயக்குநராக வேண்டும் என்ற எனது கனவுகளை காட்சிப்படுத்த பெரும் உறுதுணையாக இருந்த தமிழ் குமரனுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூறுகிறேன்” என்றார்.

ஜேசன் சஞ்சய் விஜய், டொராண்டோ ஃபிலிம் ஸ்கூலில் (2018-2020) ஃபிலிம் புரொடக்‌ஷனில் டிப்ளமோ முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து, 2020-2022 காலக்கட்டத்தில் லண்டனில் திரைக்கதை எழுதுவதில் பிஏ (ஹானர்ஸ்) பட்டம் பெற்றுள்ளார். சஞ்சய் விஜயை வரவேற்று ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like