இந்த கட்சிகளுக்கு நடிகர் விஜய் சரியான போட்டியாக இருப்பார்!
இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதற்கு ஆயிரக்கணக்கான சீக்கிய சமுதாய மக்களைக் காங்கிரஸ் கட்சி படுகொலை செய்தது.ராகுல் காந்தி இந்தியாவிற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைத்துச் சாதி, மத கலவரங்களை உண்டாக்கி ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார். ராகுல் காந்தி இந்தியாவுக்கே எதிரிபோலச் செயல்படுகிறார்.
இந்தியா குறித்து மிகத் தவறான கருத்துக்களை ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசி உள்ளார். ராகுல் காந்தியின் செயல்பாடுகள் தேச விரோத செயலாகும்.இந்தியா முழுதும் 16,000 பள்ளிகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.4,000 கோடிக்கு மேலாக நிதி தர வேண்டும். திட்டத்தின் விதிகளின் படி தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி கிடைக்கும்.
முன்னாள் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்துப் பிடிவாதம் செய்கிறது. அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி குடும்ப பிள்ளைகளுக்கு மும்மொழி வேண்டும், தமிழக மக்களின் பிள்ளைகளுக்கு இருமொழி கற்றுக் கொடுக்கிறார்கள். 1985 -ம் ஆண்டு ராஜீவ் காந்தி தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தார்.
தமிழக மக்களைத் தி.மு.க. ஏமாற்றி வருகிறது. தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மறுநாள் காலை மத்திய அரசின் கல்வி நிதி வந்தடையும்.நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமல்படுத்தப்பட் டது, நீட் விலக்கு வேண்டுமானால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
பா.ஜ.க. மது அருந்தாத உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்பதால் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைக்க வேண்டாமெனத் திருமாவளவன் நினைத்து இருக்கலாம்.
மகாவிஷ்ணு எந்தவொரு தவறும் செய்யவில்லை. மகாவிஷ்னுவை மிரட்டும் அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி திருச்சியில் ஏராளமான குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளி மீது ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை.விஜய்யின் கொள்கை என்பது நீட்டை எதிர்ப்பது, கல்வியை பொது பட்டியலுக்குக் கொண்டு வருவதாகும்.
ஆகவே விஜய் திராவிட கட்சிகளுக்குத் தான் போட்டியாளராக இருப்பார். விஜய் அரசியலுக்கு வருவதால் பா.ஜ.க.விற்கு பாதிப்பில்லை, திராவிட கட்சிகளின் வாக்குகளைத் தான் விஜய் பிரிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.