நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்மன்.. வரும் 4ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவு..!
பெங்களூரு விமான நிலையத்தில் கடந்த நவம்பர் மாதம் 2ம் தேதி, நடிகர் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் பின்னால் இருந்து தாக்குவது போல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் நடிகர் மகா காந்தி எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் சமாதானம் செய்து கொண்டதால் வழக்கு ஏதும் பதியப்படவில்லை என போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட நடிகர் மகா காந்தி சமீபத்தில் விஜய் சேதுபதி மற்றும் அவருடைய மேலாளர் ஜான்சன் மீதும் கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
அதில், “பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி தவறான வார்த்தையில் திட்டியதுடன், என்னுடைய ஜாதியை குறிப்பிட்டு பேசியதாகவும், அவரது மேலாளர் தன்னை தாக்கியதாகவும் கூறி அவர்கள் இருவர் மீதும் கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விஜய் சேதுபதி மற்றும் அவருடைய மேலாளர் ஜான்சன் ஆகிய இருவரும் வரும் ஜனவரி 4ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.