உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி..!
விழுப்புரம் மாவட்டத்தில் நடிகர் சூர்யா ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் மணிகண்டன் (40) விபத்தில் காலமானார். இதற்காக, நடிகர் சூர்யா இன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று உயிரிழந்த மணிகண்டனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த வாகன விபத்தில் மணிகண்டன் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியது மட்டுமில்லாது நிதியுதவியும் வழங்கியுள்ளார் நடிகர் சூர்யா.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படப்பிடிப்பை முடித்துள்ள சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் தனது அடுத்தப் படத்திற்காகத் தயாராகி வருகிறார்.
இந்த நிலையில்தான் அவரது ரசிகர் மன்றத் தலைவரின் இறப்பு சூர்யாவுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படங்களில் நடிப்பது மட்டுமல்லாது, ‘அகரம் ஃபவுண்டேஷன்’ மூலமாக கல்வி உதவித்தொகைத் தேவைப்படும் மாணவர்களுக்கும் தொடர்ந்து உதவி வழங்கி வருகிறார் சூர்யா. தனது ரசிகர்களையும் இதுபோன்ற உதவிகளைத் தொடர்ந்து செய்ய அறிவுறுத்தியும் வருகிறார்.