மறைந்த நடிகர் எஸ் எஸ் ஆர் மனைவி தாமரை செல்வி காலமானார்..!

'சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன்", என்கிற இயற்பெயரை தான் எஸ்.எஸ். ராஜேந்திரன் என சுருக்கி வைத்து கொண்டார். நாடக நடிகராக இருந்து பின்னர் கலைஞர் மு கருணாநிதி, கதை - வசனம் எழுதிய 'பராசக்தி ' திரைப்படத்தின் மூலம் 1952 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடிகராக திரை உலகில் அறிமுகமான இவர், அதன் பின்னர் கருணாநிதியின் 'என் அம்மையப்பன்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பட்ட பெற்றார். ஆனால் இந்த படம் வெற்றிபெறாத நிலையில், பல படங்களில் சிறு வேடங்களில் நடிக்க துவங்கினார்.
எஸ்.எஸ்.ஆருக்கு 1957 ஆம் ஆண்டு வெளியான முதலாளி திரைப்படம், திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதன் பின்னர் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். எம்ஜிஆரின் சிறந்த நண்பராகவும் இருந்தார். நடிகராக இருக்கும் போதே நாடக கலை மீது உள்ள பற்றின் காரணமாக, எஸ் எஸ் ஆர் நாடக சபா மூலம் பல நாடகங்களை அரங்கேற்றினார்.
ஒரு கட்டத்தில் வயது மூப்பு காரணமாக திரை உலகை விட்டு விலகிய எஸ் எஸ் ஆர், அவ்வப்போது கௌரவ வேடத்தில் மட்டுமே தலை காட்டினார். ஒரு சிலர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். லட்சிய நடிகர் என பெயரெடுத்த இவர், திராவிட முன்னேற்றக் கழக கொள்கையின்படி புராண படங்களில் நடிக்க மறுத்தார்.
நடிகர் என்பதை தாண்டி எஸ் எஸ் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம், தங்க ரத்தினம், மணிமகுடம், அல்லி போன்ற திரைப்படங்களை தயாரித்தார். அதே போல் மணிமகுடம் மற்றும் அல்லி ஆகிய படங்களை இவரே இயக்கினார். அரசியலிலும் களம் கண்ட ராஜேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தில் செயற்குழு உறுப்பினராக இருந்தவர்.
1962 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு, திமுக சார்பில் வெற்றி பெற்றார். சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்பட நடிகர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது . நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக திமுகவின் சார்பில் தேர்வான இவர், பின்னர் திமுக தலைவர் கருணாநிதி உடன் பிற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்தார். ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
அரசியலிலும் சில ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ள இவர், பங்கஜம் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், 1956 ஆம் ஆண்டு குலதெய்வம் படத்தில் தன்னோடு இணைந்து நடித்த சி ஆர் விஜயகுமாரியை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை 10 ஆண்டுகள் மட்டுமே நிலைத்த நிலையில், பின்னர் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இதன் பின்னர் மூன்றாவதாக தாமரைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கண்ணன் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். 2014 ஆம் ஆண்டு, சளி மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த எஸ் எஸ் ஆர் உயிரிழந்தார். இவருடைய மூன்றாவது மனைவி தாமரைச்செல்வி சற்று முன் உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்த தகவல் வெளியாகி உள்ளது.