கருப்பணசாமி கோயிலிலும் வழிபாடு நடத்திய நடிகர் சிவகார்த்திகேயன்..!
அமரன் படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது, படத்தைத் திரையரங்கில் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது அமரன். திரைக்கதை, இசை, கதாபாத்திரங்களின் நடிப்பு என மொத்தமும் படத்திற்கான வெற்றிக்கு வழிவகுத்தது. ராணுவ வீரராகச் சிவகார்த்திகேயனின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்தது.
படம் வெளியான முதல் நாளே வசூல் வேட்டையை தொடங்கியது. உலகளவில் இந்தப் படம் ரூ. 399 கோடி வசூல் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல், 2024ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த 2வது படம் என்ற இடத்தைப் பிடித்துள்ளது அமரன்.
அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், மதுரை அழகர் கோயிலுக்குச் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்தார். சுந்தரராஜ பெருமாள் சன்னதியில் சாமிதரிசனம் செய்த அவர், 18ஆம் படி கருப்பணசாமி கோயிலிலும் வழிபாடு நடத்தினார்.
அங்கு ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக நின்று மனமுருக வேண்டுதல் நடத்தினார். அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டதுடன், மலர்மாலைகள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதன்பின் வெளியே வந்த சிவகார்த்திகேயனை பார்த்த மக்கள் உற்சாகத்துடன் முண்டியடித்துக்கொண்டு கைக்கொடுத்ததுடன், புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்த சிவகார்த்தியேன், பின்னர் காரில் ஏறிச் சென்றார்.