நடிகர் சங்க கட்டட பணிக்கு ரூ.50 லட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்..!
நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான நிதியை நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் வழங்கி வருகின்றனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் 1952ஆம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கி வருகிறது. இதன் தற்போதைய தலைவராக நாசர் செயல்பட்டுவருகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தி சிவகுமாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர். மேலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர்களாக பூச்சி முருகனும், கருணாஸும் பதவி வகித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தமிழ்த்திரைப்படத்துறையில் பணியாற்றும் பணியாற்றத் துடிக்கும் நடிகர், நடிகைகள், இந்தச் சங்கத்தின் உறுப்பினர்களாக இருப்பர். குறிப்பாக, திரைப்படத்துறையில் நடிகர்களுக்கும் திரைப்படத்துறை தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகள், ஃபெப்சி தொழிலாளர்களுக்கும் நடிகர்களுக்கும் ஏற்படும் பிரச்னைகள், விநியோகஸ்தர்கள் மற்றும் நடிகர்களுக்கு இடையே பட ரிலீஸின்போது ஏற்படும் தகராறுகள் போன்ற பலவற்றை தென்னிந்திய நடிகர் சங்கம் தலையிட்டு, நடிகர் மற்றும் நடிகைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திருக்கிறது.
இந்தச் சங்கத்தில் இதுவரை மூன்றாயிரத்துக்கும் அதிகமான திரைத்துறை நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினரான,நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ‘’ தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளைத் தொடர ஏதுவாக நடிகர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள், நடிகர் சங்கத்துக்கு வளர்ச்சி நிதியாக, தனது சொந்த வருமானத்திலிருந்து ரூபாய் ஐம்பது இலட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.நாசர் மற்றும் பொருளாளர் திரு.கார்த்தி அவர்களிடம் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
Actor #Sivakarthikeyan donated Rs 50Lakh from his personal fund towards the construction of New Nadigar Sangam Building.
— Ramesh Bala (@rameshlaus) April 23, 2024
He handed the cheque to South Indian Artistes' Association President M.Nasser and Treasurer Si.Karthi.#NadigarSangam #siaa@actornasser @VishalKOfficial… pic.twitter.com/vGfoTURb0t
அண்மையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ரூ.1 கோடி நிதி வழங்கினார். அவரைத் தொடர்ந்து, புதிய நடிகர் சங்க கட்டிடத்தின் மேம்பாட்டுக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் கமல்ஹாசன் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரிடம் வழங்கினார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.