டாக்டர் ஆனார் நடிகர் சிம்பு.. பட்டம் வழங்கி பல்கலைக்கழகம் சிறப்பு..!

நடிகர், பாடகர், இயக்குநர், நடனக் கலைஞர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவரான சிலம்பரசன், தமிழ்த் திரையுலகின் முன்னனி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். கடந்த 2006-ம் ஆண்டு இவருக்கு, தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.
மேலும், கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு முன்னணி கல்வி நிறுவனங்கள் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில், வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிலம்பரசனுக்கு இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் காணொலி மூலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த விழாவின் போது நடிகர் சிலம்பரசன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. நடிகர் சிம்பு டாக்டர் பட்டம் வாங்கியிருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.