தமிழக பாஜக தலைவர் பதவிக்கான ரேஸில் நடிகர் சரத்குமார்..! சரத்குமார் புதிதாக சேர்ந்தது எப்படி?

பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி அடுத்த வாரம் தமிழகம் வருகிறார். அப்போது தமிழகத்தின் புதிய தலைவர் குறித்து மூத்த தலைவர்கள், நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிகிறார். அதன்பிறகு புதிய தலைவர் நியமனம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைவருக்கான ரேஸில் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் ஆகியோர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் சில நாட்களாக நடிகர் சரத்குமாரின் பெயரும் புதிய தலைவர் பதவிக்கான பட்டியலில் இடம்பெறுவதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. சமத்துவ மக்கள் கட்சியை 15 வருடங்களுக்கு மேலாக நடத்தி வந்த சரத்குமார், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அதனை பாஜகவுடன் இணைத்தார். அவரது மனைவி ராதிகா சரத்குமாருக்கு விருதுநகர் தொகுதியில் சீட் வழங்கப்பட, அவர் தோல்வி அடைந்தார். இருந்தபோதிலும் சரத்குமார் தொடர்ச்சியாக பாஜக நிகழ்வுகளில் பங்கெடுத்து வருகிறார்.
சரத்குமார் கட்சியை பாஜகவுடன் இணைத்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையிலும், இதுவரை அவருக்கு கட்சியில் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. இதனால் அவருடைய ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார். அவருமே விரக்தி மனநிலையில் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனாலும், ஏதாவது ஒரு பதவி வந்துவிடும் என்ற நம்பிக்கையில் சரத்குமார் ஆதரவாளர்களை சமாதானப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டமாக சென்று சமத்துவ விருந்து வைத்து வருகிறார்.
மேலும் சமீப காலமாக விஜய்யை எதிர்த்து அறிக்கை விடுவது, வக்ஃபு வாரிய சட்டத்திற்கு ஆதரவு என தொடர்ச்சியாக கவனத்தை ஈர்க்கும் விதமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அண்ணாமலை அடுத்த தலைவர் இல்லை என்று முடிவாகிவிட்ட நிலையில், சரத்குமார் அந்த பதவிக்கு குறி வைத்து தனி ரூட்டில் காய்களை நகர்த்தி வருகிறார் எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதாவது தான் தமிழகத்திற்கு நன்கு அறிமுகமான முகம், 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், பாஜகவுக்காக கட்சியையே கலைத்துவிட்டு வந்தேன் என்றெல்லாம் சொல்லி டெல்லி தரப்பு மனதை கரைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் பாஜக தலைவர் ரேஸிலேயே இல்லாத சரத்குமார் பெயர் அதில் உள்ளதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க தனக்கு உள்ள இன்புளுயன்ஸை பயன்படுத்தி சரத்குமார் இவ்வாறு செய்திகளை வர வைத்திருக்கலாம் என்கிறார்கள் பாஜக வட்டாரங்களிலேயே. எது எப்படி இருந்தாலும் இன்னும் ஒரு சில நாட்களில் பாஜக புதிய மாநிலத் தலைவர் யார் என்பதற்கான சஸ்பென்ஸ் முடிவுக்கு வரும்.