நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு..! "ஆணவக்கொலை வன்முறை அல்ல.. அக்கறைதான்!"
நடிகர் ரஞ்சித் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் சேலம் அருகே உள்ள கருப்பூர் திரையரங்கில் இன்று திரையிடப்பட்டது. இதில் அப்படத்தை இயக்கி நடித்த நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: படத்தை பொதுமக்களுடன் அமர்ந்து பார்த்தது சந்தோஷமாக உள்ளது. இதைவிட சந்தோசம் வேறு என்ன இருக்கிறது. எளிய கலைஞர் மக்கள் எனக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும். இந்தப்படம் நேர்மையான படம். தாய்மார்கள் பார்க்க வேண்டிய படம். பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு படம் எடுத்துள்ளேன்.
நாடகக் காதலுக்கு எதிராக படம் எடுத்துள்ளேன். இதற்கு எதிர்ப்பு வந்து கொண்டு தான் உள்ளது. இருப்பினும் படம் வெளியானது சந்தோஷமாக இருக்கிறது. ஜூலை 5ஆம் தேதி படம் வெளிவரும் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் பல காரணங்களால் படம் தாமதமாக வெளியாகி உள்ளது.
அப்பொழுது ஆணவப்படுகொலை தொடர்பாக செய்தியாளர்களை அளித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் ரஞ்சித், “பெற்றவர்களுக்கு தான் வலி தெரியும், பைக்கை திருடி சென்றாலே உடனே போய் அடிப்பதில்லையா? ஒரு செருப்பு காணாமல் போன கூட கோபப்படுகிறோம்.
அப்படி இருக்கும் போது வாழ்க்கையே பெற்ற பிள்ளைகள் தான் என இருக்கும் பெற்றோர்களுக்கு அந்த பிள்ளையின் எதிர்காலம் பாதிக்கப்பட போகிறது என்னும் பொது வரும் கோவம் அக்கறையினால் தான் வருகிறது. அது வன்முறையோ, கலவரமோ அல்ல. எது நடந்தாலும் அது நல்லதோ கெட்டதோ அக்கறையினால் தான் நடக்கிறது” என பேசியுள்ளார்.
சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், நடிகர் ரஞ்சித் ஆணவக் கொலையை நியாயப்படுத்தும் விதமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.