பூர்வீக ஊரான நாச்சிக்குப்பம் கிராமத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்..!!
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படம் இதுவரை சுமார் ரூ.500 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த படம் வெளியானதை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். அங்கு தனது ஆன்மிக பயணத்தை முடித்துக் கொண்டு உத்தரபிரதேசத்திற்கு சென்றார். அங்கு அந்த மாநில முதல்வர் யோகிஆதித்யநாத், எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். மேலும் அங்கு துணை முதல்வருடன் சேர்ந்து ஜெயிலர் படத்தையும் பார்த்தார். பிறகு அயோத்தி ராமர்கோவிலுக்கு சென்று அங்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் திடீரென ஜெயநகரில் உள்ள பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) பணிமனைக்கு சென்று பி.எம்.டி.சி. ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில், முதன் முறையாக தனது பூர்வீக ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்றார். அப்போது ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயண ராவுடன் சேர்ந்து பெற்றோர் நினைவிடத்தில் பூஜை செய்து வழிபாடு செய்தார். ரஜினிகாந்த் தனது சொந்த ஊருக்கு வந்ததை கண்டு அந்த கிராம மக்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். மேலும் சொந்த ஊருக்கு வந்த ரஜினிகாந்துக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.