35 ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு கல்லறை கட்டிய நடிகர் ராஜேஷ்!

திரைத்துறையில் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 45-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். பின்பு முன்னணி பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த வகையில் கடைசியாக கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். இதனிடையே ஓம் சரவண பவ யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வந்தார். இதைத் தவிர்த்து தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார்.
50 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ராஜேஷ், இன்று காலை (மே 29) ரத்த அழுத்தம் குறைந்து, மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் ஜூன் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் கூறினர். ராஜேஷின் மகள் அமெரிக்காவிலிருந்து வர வேண்டும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
ராஜேஷ் மறைவைத் தொடர்ந்து, அவரை பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் ராஜேஷ் இறப்பதற்கு 35 வருடங்களுக்கு முன்பே தனக்கு தானே கல்லறை காட்டியுள்ளார் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? 40 வயதிலேயே ராஜேஷ் கல்லறை கட்ட காரணம் என்ன? என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
நடிகர் ராஜேஷ் தன்னுடைய 40 வயதிலேயே கல்லறை கட்டி வைக்க காரணமாக இருந்தவர் யார் என்பதை பற்றி தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது பிரபல தொழிலதிபர் ஜி.ஆர்.பி விஸ்வநாதனை பார்த்துதான், அவரை பின்பற்றி இந்த முடிவை எடுத்தாராம் ராஜேஷ். அவரும் தான் இறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு பிடித்த மாதிரி கல்லறையை கட்டி முடித்தாராம். பின்னர் சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சீனாவில், ஒரு நம்பிக்கை உண்டாம். "எவன் ஒருவன் தன்னுடைய இறப்புக்கு முன்பே தனக்கு கல்லறை அமைத்து கொள்கிறாரோ அவன் நோய்களை வென்று 100 ஆண்டுகள் வாழ்வான் என்பது ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கை குறித்தும் அந்த பேட்டியில் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
ராஜேஷ் இப்படி கல்லறை கட்டியதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது நடிகர் ராஜேஷை பொறுத்தவரை தான் பயன்படுத்தும் விஷயங்கள் தனக்கு பிடித்தது போல் இருக்க வேண்டும் என நினைப்பவர். அப்படி பார்த்தால் தான் இறந்த பின்னர் தன்னை அடக்கம் செய்ய போகும் கல்லறை கூட தனக்கு பிடித்த மாதிரி டிசைன் செய்ய நினைத்தார். எனவே தனது 40 வயதில் மார்பல் கற்கள் கொண்டு தன்னுடைய கல்லறையை கட்டி முடித்தார். அந்த கல்லறை 25 ஆண்டுகளுக்கு பின்னர் பாசி பிடித்து கல் மங்க துவங்கியதால், 15 ஆண்டுகளுக்கு முன் அதை மீண்டும் கிரானைட் கல் கொண்டு புதுப்பித்தார். தனது மார்பளவு சிலை ஒன்றையும் அதில் நிறுவியுள்ளார் ராஜேஷ்.