நடிகர் பிரசாந்துக்கு ரூ.2000 அபராதம் விதித்த போலீஸ்..!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் பிரசாந்த்.. ஜூன்ஸ், லண்டன், வின்னர் என இவர் நடித்த பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.
தற்போது அந்தகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.இருப்பினும், அன்றைய தினம் பல படங்கள் வெளியாவதால் ஒரு வாரம் முன்னதாகவே அந்தகன் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக டாப் ஸ்டார் பிரசாந்த் இப்போது அந்தகன் பட புரமோஷனில் பிஸியாகி இருக்கிறார்.
இந்நிலையில்,பிரபல தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகர் பிரசாந்த் நேர்காணல் கொடுத்திருந்தார். அந்த நேர்காணலில் நடிகர் பிரசாந்த் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டும், அவருக்கு பின்னால் தனியார் யூடியூப் சேனல் தொகுப்பாளினி அமர்ந்து கொண்டும் நேர்காணலை கொடுத்திருந்தார்.
சாலை முழுவதும் நடிகர் பிரசாந்த் மற்றும் தனியார் யூடியூப் தொகுப்பாளினி ஆகியோர் தலைகவசம் அணியாமல் வாகனத்தை இயக்கிக் கொண்டே நேர்காணல் எடுக்கப்பட்டிருக்கும். புல்லட்டில் நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் தொகுப்பாளினியுடன் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானாது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் பிரசாந்த் மற்றும் தொகுப்பாளினி இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 2,000 ரூபாய் அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரசாந்த் ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியதாக பல்வேறு விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், சென்னை போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.